Skip to main content

நெல்லுக்கு 3,000 கொள்முதல் விலை - அரசுக்கு அன்புமணி கோரிக்கை 

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

3,000 purchase price for paddy! Anbumani's request to the government

 

தமிழகத்தில் நடப்பாண்டுக்கான நெல் கொள்முதலை இன்று(1ம் தேதி) முதல் தொடங்குகிறது தமிழக அரசு. இந்த நிலையில், “சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 75 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு 100 ரூபாயும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்” என்று சமீபத்தில் அரசு அறிவித்திருந்தது. நெல்லுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படும்; வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் தமிழக விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

 

இது குறித்து பாமக தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களின் சாகுபடிக்காக மேட்டூர் அணை நடப்பாண்டில் மே மாதம் 24ஆம் தேதியே திறக்கப்பட்டதன் பயனாக குறுவை அறுவடை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. அதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் பருவம் அக்டோபர் மாதத்திற்கு பதிலாக செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி முன்கூட்டியே நெல் கொள்முதல் தொடங்கவிருப்பது பல வழிகளில் விவசாயிகளுக்கு நிம்மதியளிக்கும் என்பதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை.

 

ஆனால், நெல்லுக்கான கொள்முதல் விலை என்பது உழவர்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. இந்திய நடைமுறைப்படி நெல் கொள்முதலை முழுக்க முழுக்க மத்திய அரசு தான் மேற்கொள்கிறது. மத்திய அரசுக்காக நெல்லை கொள்முதல் செய்து கொடுக்கும் பணியை மட்டும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மேற்கொண்டு வருகிறது. நெல்லுக்காக மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலை எப்போதுமே போதுமானதாக இருப்பதில்லை என்பதால், உழவர்களுக்கு கூடுதல் கொள்முதல் விலை கிடைக்கும் வகையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்கி வருகின்றன.

 

அதன்படி தமிழக அரசு நடப்பாண்டுக்காக அறிவித்துள்ள ஊக்கத்தொகை போதுமானதல்ல. நடப்பாண்டு குறுவை பருவத்தில் ஒரு குவிண்டால் சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2040, சன்ன ரக நெல்லுக்கு ரூ.2060 கொள்முதல் விலையாக மத்திய அரசு நிர்ணயித்திருக்கிறது. அத்துடன் மாநில அரசின் ஊக்கத் தொகையையும் சேர்த்தால் முறையே ரூ. 2115, ரூ.2160 கிடைக்கும். இது போதுமானதல்ல.

 

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்பது தான் தமிழக உழவர்களின் கோரிக்கை ஆகும். நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயித்த கொள்முதல் விலை நியாயமும் இல்லை; போதுமானதும் அல்ல. நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ.1986-ஆக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அத்துடன் 50% ரூ.993 லாபம் சேர்த்து குவிண்டாலுக்கு ரூ.2979 கொள்முதல் விலை நிர்ணயிப்பதுதான் உழவர்களுக்கு ஓரளவாவது லாபத்தை உறுதி செய்யும்.

 

ஆனால், கடந்த ஆண்டின் கொள்முதல் விலையை விட மத்திய அரசு குவிண்டாலுக்கு ரூ.100 மட்டுமே உயர்த்தியுள்ளது. மத்திய அரசு கொள்முதல் விலையை திருப்தியளிக்கும் அளவுக்கு உயர்த்தாத நிலையில், மாநில அரசுதான் ஊக்கத்தொகையை உயர்த்தி உழவர்களின் எதிர்பார்ப்பை ஓரளவாவது ஈடு செய்ய வேண்டும். கடந்த ஜூன் மாதம் நெல்லுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு அறிவித்த போதே, தமிழக அரசு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தமிழக அரசு அந்த கோரிக்கையை பரிசீலிக்கக்கூட இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

 

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதுதான். கடந்த 2020ஆம் ஆண்டு வரை இதே கோரிக்கையை இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் எழுப்பிக் கொண்டிருந்தார். 

 

அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் இப்போது அவரது கைகளுக்கே வந்து விட்ட நிலையில், உழவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இதைவிட சிறந்த தருணம் வாய்க்காது. எனவே, இனிமேலும் தாமதிக்காமல் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலையாக ரூ.3,000 கிடைக்கும் வகையில், நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்