ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.
வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.
இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.