வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுவடைந்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது. சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி நிதி ஸ்டாலின் அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''சென்னையில் 89 படகுகள், பிற மாவட்டங்களில் 130 படகுகள் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் 300 நிவாரண மையங்கள் தயாராக இருக்கிறது. சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 மையங்கள் தயாராக உள்ளது. மொத்தம் 931 மையங்கள் தற்பொழுது தயார் நிலையில் உள்ளது. சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மழை வெள்ளத்தை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவத்துறையும், மாநகராட்சியும் இணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க ஆயிரம் சிறப்பு முகாம்கள் தொடங்கி வைத்திருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 100 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 13,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். சென்னையில் மொத்தம் எட்டு இடங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளது. அவற்றை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். தேவைப்பட்டால் சென்னைக்கும் அவர்கள் அழைத்துவரப்பட்டு வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தபடுவார்கள். நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்னையில் விடுமுறை அறிவிக்கப்படுமா என்பது குறித்து இன்று மாலைக்குள் தமிழக முதல்வர் முடிவெடுப்பார்'' என்றார்.