நாம் வாழ்கின்ற இந்த பூமி தாய்க்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் நோக்கத்தில் பசுமை மற்றும் இயற்கையோடு மனிதகுலம் ஒன்றி வாழ வேண்டும் எனும் விழிப்புணர்வுக்காக தமிழக அரசின் துணையோடு ராமநாதபுரம் மாவட்டம் மார்ட்டின் சேரிட்டபில் டிரஸ்ட் ஒரு புது முயற்சி எடுத்துள்ளது.
72 மணி நேரத்தில் இந்த உன்னதமான நிகழ்வு நடைபெற உள்ளது. பசுமையை அதிகரித்து அதனோடு கை கைகோர்க்கும்படி மிக அதிக அளவிலான விதைப்பந்துகளை உருவாக்கி 72 மணிநேரத்தில் உலகிலேயே மிக அதிக அளவில் உருவாக்கப்பட்ட விதைப்பந்துகள் எனும் சாதனையை நிகழ்த்தவுள்ளது.
இந்த நிகழ்வு 21.1.2020 செவ்வாய்க்கிழமை முதல் 23.1.2020 வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் ஐஏஎஸ் தலைமையில், கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமாரின் முன்னிலையில் நேஷனல் அகாடமி பள்ளியில் மாணவ மாணவிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் என சுமார் 2500 பேர் ஒன்றாக இணைந்து 30 லட்சம் விதை பந்துகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த விதைப்பந்து உருவாக்கப்படும் சாதனை நிகழ்வில் சீதாப்பழம், விளாம்பழம், கொய்யாப்பழம், சரக்கொன்றை, மயில்கொன்றை மற்றும் பூவரசன் ஆகிய ஆறு விதமான மரங்களின் விதைகள் உபயோகிக்கப்படுகிறது. ஒரு விதைப்பந்தில் 4 விதைகள் வீதம் ஒரு கோடியே 25 லட்சம் விதைகளைக் கொண்டு 30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கப்பட உள்ளது.
விதை பந்துகளின் முக்கியத்துவம் உலகம் முழுக்க பரவ வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்வு உலக சாதனை படைக்கப்படவுள்ளது.