திருப்பத்தூர் மாவட்டம், கரோனா நோய் வந்தவர்கள் அதிகமாக இருப்பதால் அந்த மாவட்டம் சிவப்பு பகுதியாக (டேஞ்ஜர்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதுமே 144 தடை உத்தரவு கடுமையாக பின்பற்றப்படுகிறது. வங்கிகள், அஞ்சலகம்கூட செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாணியம்பாடி தன்ஜீம் ஜமாத் சார்பில் வெளியாகியுள்ள ஒரு அறிக்கை சமூக வளைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அமைப்பின் லெட்டர் பேடில் உருது மொழியில் எழுதப்பட்ட அந்த அறிக்கையில், தன்ஜீம் ஜமாத் நிர்வாகிகள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீலை சந்தித்து லாக்டவுன் காரணமாக நகரம் முழுவதும் அனைத்து கடைகள் மூடி இருப்பதாலும், அடுத்த இரு நாட்களில் ரமலான் மாதம் ஆரம்பம் ஆக உள்ளதால், முஹல்லாகளில் உள்ள கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தர கோரிக்கை வைத்ததாகவும், அதன் அடிப்படையில் அமைச்சர் நீலோபர் உடனடியாக வட்டாட்சியர் மற்றும் ஆணையாளர் ஆகியோரிடம் பேசியதாகவும், அதற்கு அதிகாரிகளும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் கடைகள் திறக்க அனுமதி வழங்கி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கடிதம்தான் சமுக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவன் அருள் கவனத்துக்கு சென்றதும், அதுபோன்ற அனுமதி ஏதும் வழங்கவில்லை எனக்கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில், கடந்த 13ம் தேதி கோட்டை பகுதியில் ஒரு பெண்ணுக்கு கரோனா நோய் தோற்று உறுதியானது. இதனால் வரும் மே 3ம் தேதி வரையில் லாக்டவுன் தொடரும் என்றும், அதற்குள் எதாவது புதியவருக்கு நோய் தோற்று கண்டறியப்பட்டால், அன்றைய தேதியில் இருந்து ஒரு மாதத்திற்கு மேலும் லாக் டவுன் தொடரும் எனக்கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறகு எப்படி இந்த அறிக்கை என நாம் விசாரித்தபோது, தனது சமுதாய மக்களிடம் அமைச்சரின் இமேஜ் டேமேஜ்ஜாக்கியுள்ளது. அதோடு சமீபத்தில் ஒரு நிகழ்வுக்காக கரோனா தனிமைப்படுத்தலில் இருந்தவர்களை 6 நாட்களிலேயே வீட்டுக்கு அனுப்பி மகிழ்ச்சியாக்கினார். அப்படி அனுப்பப்பட்ட ஒருவருக்கு கரோனா இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரம்ஜான் வருவதால் கடைகள் திறக்க வியாபாரிகள் அனுமதிக்க கேட்க, நான் சொன்னா அனுமதி தருவாங்க. நீங்க கவலைப்படாதிங்க, அனுமதி தரச்சொல்றன் எனச்சொல்லி பேசியுள்ளார். அதிகாரிகள் அரசின் உத்தரவை காட்டி மறுத்துள்ளனர். ஆனால், அவர் தன் சமுதாயத்தினரிடம் திறக்கலாம் எனச்சொல்ல, அதுவே அறிக்கை வாயிலாக பாராட்டாக வந்துள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது வாணியம்பாடியில்.