தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதைக்காக மது மட்டுமின்றி மாத்திரைகள், ஊசிகள், கஞ்சா, குட்கா பொருட்களை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதில் மாணவர்கள் அதிகமாக அடிமையாகி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளில் அதிகம் ஈடுபடுகின்றனர். இதனால் தமிழக போலிசார் சிறப்பு தனிப்படைகளை அமைத்து இதனை விற்பனை செய்வோர்களைத் தேடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில், குட்கா பொருட்கள் அதிகம் விற்பனை செய்யப்படுவதையடுத்து டி.ஐ.ஜி கயல்விழி, ஏ.டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்தார். இந்த தனிப்படை போலிஸார் வாகன சோதனை செய்த போது பெங்களூரில் இருந்து வந்த ஒரு காரில் குட்கா பொருட்கள் கண்டறியப்பட்டு அந்த காரில் வந்தவர்களின் தகவலின் அடிப்படையில் மேலவெளி பிருந்தாவனத்தில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த 3 டன் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட பெங்களூர் பிரவின்குமார் (21), தஞ்சை பக்காரம் (48), முகமது பாரூக் (35), பன்னீர்செல்வம் (40), முத்துப்பேட்டை சோழாராம் (41), மற்றும் 15 வயது சிறுவன் உள்பட 6 பேரை கைது செய்த போலிசார் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.