தமிழ்நாட்டில் உள்ள காலியாக உள்ள ஐ.ஏ.எஸ். பணியிடங்களை தமிழக அரசு பூர்த்தி செய்து வருகிறது. அரசு பணிகளுக்கு யூ.பி.எஸ்.சி(UPSC) தேர்வு மூல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு நேரடியாக தேர்வு செய்யும். அது மட்டுமில்லாமல், அரசு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகளை பதவி உயர்வின் மூலம் ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி அவர்கள் நியமிக்கப்படுவார்கள். இது மாநில பட்டியல் என்று அழைக்கப்படும்.
முன்பெல்லாம் மாநில பட்டியல் இருந்து தேர்வு செய்யப்படுபவர்கள், அரசின் வருவாய்த்துறையில் இருந்தே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அரசின் பல்வேறு துறைகளில் இருந்தும் சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நேரடி நியமனம் மற்றும் மாநில பட்டியல் நியமனம் ஆகிய இரண்டு வகைகளில் நியமனம் செய்யப்படுகின்றனர்.
அந்த வகையில், மாநில பட்டியலில் இருந்து கடந்த 2023க்கான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக எஸ்.மாலதி ஹெலன், ஜி.ரவிகுமார், எஸ்.மிருணாளினி ஆகிய மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரை தேர்வு செய்வதற்காக 9 பேர் கொண்ட பட்டியலை கடந்த மாதம் மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் தலமையிலான தமிழக அரசு அனுப்பி வைத்தது. அவர்களுக்கான நேர்முகத் தேர்வு சமீபத்தில் டெல்லியில் நடந்தது.
இதனையடுத்து, மத்திய அரசு மூன்று பேரையும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமித்து ஒப்புதல் வழங்கியுள்ளது. பொதுவாக, மாநில பட்டியலில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமணம் குறித்த பட்டியலை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகு, பட்டியலில் இருப்பவர்களில் யாரை மாநில அரசு விரும்புகிறதோ அவர்களையே ஒன்றிய அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் தேர்வு செய்து ஆணைப் பிறப்பிக்கும்.
அந்த வகையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தற்போது தேர்வான மேற்கண்ட மூன்று அதிகாரிகளுக்கும் அரசு தரப்பில் அழுத்தமான சிபாரிசு இருக்கிறது. அதாவது, ஒவ்வொருவருக்கும் அமைச்சர் மற்றும் முதல்வரிடம் நெருக்கமாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சிபாரிசு இருந்துள்ளது என்கிறது கோட்டை வட்டாரம்.