கடந்த 2018ம் ஆண்டு மே 22 ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் ஐஜி சைலேஷ் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், எஸ்பி மகேந்திரன், டிஎஸ்பி லிங்க திருமாறன், காவல் ஆய்வாளர்கள் திருமலை, ஹரிகரன், பார்த்திபன், எஸ்ஐக்கள் சொர்ணமணி, ரென்னீஸ், காவலர்கள் ராஜா சங்கர், சுடலைக்கண்ணு, தாண்டவ மூர்த்தி, சதீஷ்குமார், ராஜா, கண்ணன், மதிவாணன் என பல பேர் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல் ஏழு பேரை சுட்டு கொலை செய்த சுடலைக்கண்ணு பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்கள் மீதான நடவடிக்கை தொடர்ந்து வருகின்ற நிலையில் வட்டாட்சியர்கள் சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் உத்தரவிட்டதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.