Skip to main content

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் விபரீதம்; 3 சிறுவர்கள் பலி!

Published on 09/09/2024 | Edited on 09/09/2024
3 children passed away in vehicle overturn during the Vinayagar Chaturthi celebration

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், தேனி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பொதுமக்கள் விநாயகர் சிலை வைத்து மிகுந்த உற்சாகத்துடன் வழிபட்டுக் கொண்டாடினர். சிலபகுதிகளில் சிறுவர்களும் ஆங்காங்கே சிறு சிறு விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அந்த வகையில், தேனி மாவட்டம் தேவாரம் அருகே மறவாபட்டியைச் சேர்ந்த சிறார்கள் விஷால், நிவாஸ், கிஷோர் மற்றும் சிலர் அவர்களது வீடு அருகே விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடினர். இதையடுத்து, விநாயகர் சிலையை டிராக்டரில் அலங்காரம் செய்து கரைப்பதற்காக சிந்தலசேரி எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது, சிந்தலசேரியில் உள்ள குளத்தில் சிலையைக் கரைத்து விட்டு அங்கிருந்து திரும்பும் வழியில், எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த 3 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த மூன்று சிறார்களான மறவபட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் விஷால், தமிழன் மகன் நிவாஸ், பிரபு மகன் கிஷோர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தேவாரம் காவல்துறையினர், மூன்று சிறார்களின் உடல்களைக் கைப்பற்றி பாளையம் அரசு மருத்துவமனைக்கு.. பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் நடந்த விபரீத விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்.. தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மறுபுறம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் 3 சிறார்கள் உயிரிழந்த சம்பவம், மறவபட்டி கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விபத்தில் இறந்த சிறார்கள் மூவரும் 14 வயது நிரம்பிய பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முறையான அனுமதி பெற்று சிலைகள் வைத்து.. வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி சிலையைக் கரைக்க வேண்டும் என்று காவல்துறை கூறியிருந்த நிலையில், கிராமங்களில் இந்த நடைமுறை முறையாக பின்பற்றப்படுவதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதனால்தான், தற்போது சிறார்கள் விபத்தில் சிக்கிய இருப்பதாகக் கூறும் பொதுமக்கள், காவல்துறையினர் கிராமங்களிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். விரிவான விசாரணைக்கு பிறகே விபத்து நடந்த காரணம் தெரிய வரும் என்று போலீசார் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

தேனியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்