கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் காட்டுப்புதரில் பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள அத்திமரத்துப்பள்ளம் அடுத்துள்ள குண்டியால்நத்தம் பகுதி காப்புக்காட்டில் நான்கு நாட்களுக்கு முன்பு திருமணமான பெண் ஒருவர் சடலமாக கிடந்தார். பெண்ணின் மரணத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாக பெண்ணின் மகள் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். பெண்ணின் உடலானது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் செல்போன் சுமார் 30 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்தபொழுது திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியை சேர்ந்த ஏழுமலை என்ற இளைஞருடன் அவர் கடைசியாக பேசியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் ஏழுமலையை தேடிவந்த நிலையில், உறவினர் வீட்டில் தஞ்சமடைந்திருந்த ஏழுமலையை கண்டுபிடித்து கைது செய்தனர்.
ஏழுமலையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஏழுமலை அப்பெண்ணிடம் நெருக்கமாகப் பழகி வந்தது தெரிய வந்தது. இதற்கு ஏழுமலை பணம் கொடுத்து வந்ததாகவும் தெரிந்தது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஏழுமலை, கோவிந்தராஜ், 17 வயது சிறுவன் ஒருவன் என மூன்று பேர் மது அருந்திவிட்டு பெண்ணிற்கு போன் செய்து உடனடியாக காப்புக்காட்டுப் பகுதிக்கு வரும்படி தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இளைஞர்கள் சொன்னபடி காப்புக்காட்டுப் பகுதிக்கு வந்த அந்த பெண்ணிடம் உல்லாசமாக இருந்தனர். பெண்ணும் இளைஞர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர் மூவரிடமும் அப்பெண் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் தர மறுத்துள்ளனர். உடனடியாக அங்கிருந்த நபர் ஒருவரின் செல்போனை அப்பெண் பறித்துக்கொள்ள, இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் சேர்ந்து அவரை தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது.
பின்னர் சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனை கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற இருவரை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.