திண்டுக்கல்லில் திமுக கிழக்கு மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கழக துணைப் பொதுச் செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி தலைமை தாங்கினார். இதில் மேற்கு மாவட்டச் செயலாளரும், உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி மற்றும் கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில் குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் உள்பட மாவட்டம், நகரம், ஒன்றியம்,பேரூர் கழகம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, ''ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறார் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் இளைஞர்களை பெருந்திரளாக திரட்ட வேண்டும். அதிலும் தமிழகத்திலேயே நம் மாவட்டத்தில்தான் அதிக அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டனர் என்ற அளவுக்கு 25 ஆயிரம் இளைஞர்களை திரட்ட வேண்டும்.
அதேபோல் வாக்குச்சாவடிக்கு முகவர்கள் சேர்க்கும் பணி மற்றும் இல்லம் தேடி சென்று இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த முறை வாங்கிய ஓட்டுகளை விட அதிக அளவில் வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுகள் வாங்க வேண்டும். அந்த அளவுக்கு மாநகராட்சி, நகராட்சிகள், ஒன்றியம், பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் மூலம் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். அதனால்தான் முதல்வர் சொன்னதுபோல் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த முறை வாங்கியதை விட கூடுதலாக வாக்கு வாங்க வேண்டும். அதற்காக அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும். உங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம்'' என்றார்.