கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த மாதம் நடைபெற்ற பிரசவங்கள், அறுவை சிகிச்சைகள், ஆய்வகப் பரிசோதனைகள், ஸ்கேன் பரிசோதனைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மேலும், குறைந்த எண்ணிக்கையில் பிரசவம் நடைபெற்ற வேப்பூர், புவனகிரி, பரங்கிப்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடி ஆகிய மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை உயர்த்துமாறு மாவட்ட இணை இயக்குனருக்கு அறிவுறுத்தினார்.
மருத்துவமனைகளில் கடந்த மாதத்தில் நடைபெற்ற மகப்பேறு இறப்பு மற்றும் பச்சிளம் குழந்தைகள் இறப்பு பற்றியும் மருத்துவ அலுவலர்களிடம் விளக்கங்கள் கேட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு, பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை வழங்குமாறு அனைத்து மருத்துவ அலுவலர்களிடமும் கேட்டுக் கொண்டார்.
இதேபோல் போலியோ சொட்டுமருந்து முகாம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி, “கடலூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளுக்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்திரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட 1,611 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட 2,44,714 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் வீடு வீடாகச் சென்று பார்வையிட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, உலக சுகாதார நிறுவன நோய்த் தடுப்பு மருத்துவ அலுவலர் சாய்ராபானு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வர் மிஸ்ரா, கடலூர் இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) ரமேஷ்பாபு, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.