கரோனா என்கிற பேரழிவு உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவின் சொத்துகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தயார் ஆகி வருகிறது.
இந்திய இரயில் வழித்தடங்களை விற்பனை செய்வதற்கு விலை நிர்ணயம் செய்து ஏலம் அறிவிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த ஏலம் சர்வதேச ஏலமாக இது நடக்கும். இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி ஸ்வீடன், ஜப்பான், சீனா, ஜெர்மன் நாட்டு நிறுவனங்கள் பங்கேற்ககூடும் என்கிறார்கள்.
இதுகுறித்து நக்கீரனுக்காக தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரனிடம் பேசினோம்.. அவர் நம்மிடம், “இந்திய ரயில்வேயில் 100 வழித்தடங்களில் 35 ஆண்டுகள் ரயில்கள் விற்பனைக்கான ஏல அறிவிப்பை கடந்த ஜூன் 1 முதல் தேதி மத்திய அரசின் இ - கொள்முதல் போர்டலில் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது.
சண்டிகார், சென்னை, டெல்லி (இரண்டு), அவுரா, ஜெய்ப்பூர், மும்பை (இரண்டு), பாட்னா, பிரயாக்ராஜ், பெங்களூரு, செகந்திராபாத் என 12 தொகுப்புகளாகப் பிரித்து விலை நிர்ணயம் செய்து தனித்தனி ஏல அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. மொத்தம் 224 ரயில்கள். நிதித்தகுதி ஆய்வு, இறுதி ஏலம் என இரண்டு கட்டமாக நடக்கும்.
பல்லவன், வைகை, கொச்சுவேலி, கன்னியாகுமரி, நெல்லை புதுச்சேரி- செகந்திராபாத், சென்னை- கோவை, கொச்சுவேலி - கெளவுகாத்தி, சென்னை - மும்பை, சென்னை-மங்களூர், சென்னை-டெல்லி, திருநெல்வேலி - கோவை விரைவு ரயில்கள் என மொத்தம் 24 ரயில்கள் சென்னை தொகுப்பில் ஏலம் விடப்பட இருக்கிறது. இந்தியாவில் தமிழகத் தொகுப்பு ரயில்கள் தான் அதிக விலை - ரூ.3221 கோடி.
துவக்க நிலையில் ரயில்வே லோகோ பைலட்டுகள், கார்டுகள் பயண்படுத்த வழி வகை. ஐ.ஆர்.சி.டி.சி, ரயில்வே கவுண்டர்களில் முன்பதிவிற்கு அனுமதி. தனி மென்பொருள் மூலம் கணக்குகள் பராமரிப்பு. 16 முதல் 24 பெட்டிகள் கொண்ட சொகுசு ரயில்களாக இயக்கலாம். கட்டணங்களை தனியார்களே நிர்ணயிக்க அதிகாரம். இருக்கைக்கு ஏற்ப கட்டணம் வசூல் உரிமை. பார்சல் மற்றும் லக்கேஜ் ஏற்றி கட்டண வசூலிக்கலாம். பெட்டிகளில் விளம்பர உரிமை. ரயில்வே யார்டுகளில் பராமரிப்பு. அனுமதி என எல சரத்துகள் தெரிவிக்கின்றன.
ரயில்கள் மற்றும் நிலையங்களின் டிக்கெட் பரிசோதகர்கள், ஏ.சி. மெக்கானிக்குகள், டிரைவர்கள், கார்டுகள், பெட்டிகள் இணைப்பு, பராமரிப்புகளில் ஈடுபடும் மெக்கானிக்குகள், மின்சாதன பிட்டர்கள், மேற்பார்வையாளர்கள் என 18000 ரயில்வே ஊழியர்கள் இதனால் உடனடியாக வேலை இழப்பார்கள்.
தனியார் ரயில்களில் பயண சலுகைகள் இடம்பெறாது. ஆண்டுக்கு 8.85 கோடி பயணிகளுக்கு முன்பதிவு கன்பர்ம் ஆவது இல்லை. நல்ல விலைக்கு விற்க, கூடுதல் ரயில்கள் இயக்காமல் பயணத் தேவைகள் திட்டமிட்டு கூட்டப்பட்டு வந்தன. முக்கியப் பாதைகளின் முக்கிய ரயில்கள் தனியாரிடம் விற்பது ரயில்வேத்துறை சீரழிக்கும் நடவடிக்கை. அரசு கைவிட வேண்டும்” என்றார்.