கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த மாங்குளம் அருகே கடலூர் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கடந்த 26ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 460 மூட்டைகளில் சுமார் 23 டன் ரேஷன் அரிசி மூட்டைகளாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த அரிசி மூட்டைகளை ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரிந்தது. அதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், மங்களூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் ரஞ்சித்(25), சித்திரவேல் மகன் வேல்முருகன்(30), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உலகமூர்த்தி மகன் புருஷோத்தமன்(32), கோவிந்தன் மகன் பெருமாள்(36) வேலூர் மாவட்டம் சங்கரன்பாளையம் மணி மகன் ராமச்சந்திரன்(51), கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூர் பகுதி மாரிமுத்து மகன் ராமலிங்கம்(56) ஆகிய 6 பேரும் சேர்ந்து விளம்பாவூர், வேப்பூர், மங்களூர் பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் இருந்து ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்க ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து, அவர்களைக் கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ரஞ்சித், வேல்முருகன், லாரி உரிமையாளர் ராமச்சந்திரன் ஆகியோர் மீது அரிசி கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர்களை கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், கடலூர் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். அதையடுத்து அந்த 3 பேரையும் கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து 3 பேரும் கள்ளச் சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.