இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று (12.11.2023) உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர்.
இதனிடையே காற்று மாசுபாடு காரணமாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள நேரப்படி தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அறிவுறுத்தியிருந்தது. மேலும் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக காவல் துறை சார்பில் தனிப்படையையும் அமைத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு காவல்துறை தலைமை தீபாவளி இயக்குநர் உத்தரவின் பேரில், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட 12.11.2023 மற்றும் 13.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பட்டாசு வெடிப்பதற்காக குறிப்பிடப்பட்ட நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணியை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த காரணத்திற்காக மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 246 பேர் மீது 2 ஆயிரத்து 206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 2 ஆயிரத்து 95 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 2 ஆயிரத்து 95 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.