
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் 21வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழக ஆளுநர் ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நேற்று முன்தினம் பெரியார் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைப்பேசிகள் எடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் சேலம் மாவட்டக் காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி கேட்டுக் கொள்ளப்படுவதாகச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் கருப்பு உடையணிந்து வரக் கூடாது என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் நேற்றைய தினம் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள சேலம் வந்த ஆளுநர் ரவிக்கு திராவிடர் விடுதலைக் கழகம், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மாணவர்கள் அமைப்பினர் கருப்பு சட்டை அணிந்து கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இந்த நிலையில் பெரியார் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றபோது பாமகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சதாசிவம், அருள் ஆகியோர் வெளிநடப்பு செய்ததாகத் தகவல் வெளியாகியது.
இதனையடுத்து இது குறித்து பாமகவினரிடம் விசாரித்தபோது, சதாசிவம் மற்றும் அருள் இருவரும் ஆளுநருக்கு எதிராக வெளிநடப்பு செய்யவில்லை. மக்கள் பிரதிநிதியான இருவருக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்பதால் இருவரும் வெளியேறியதாகத் தகவல் தெரிவித்தனர். இதனிடையே பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொள்ளவில்லை என்பதும், மாறாகத் தமிழக முதல்வர் தலைமையில் நடந்த முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.