கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் குடியரசு தின விழா பாரதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. என்.எல்.சி சேர்மன் ராகேஷ்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்கள், பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் பேசும்போது,
"நமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மின்துறை வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக மாசில்லாத பசுமை மின்சக்தி எதிர்காலத்தில் சிறப்பான பங்களிப்பை அளிக்க உள்ளது. இந்நிலையில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியால் இயங்கும் அனல் மின் நிலையத்துக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் நிலையங்களிலிருந்து உற்பத்தியாகும் மின்சக்தி மூலம், தேசத்தின் சேவையை 40 சதவீதத்தை 2022-ஆம் ஆண்டு ஆண்டுக்குள்ளும், 45 சதவீதத்தை 2030-ம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என அரசு திட்டமிட்டுள்ளது.
இதை நிறைவேற்றும் வகையில் மணிக்கு 17 கோடியே 50 லட்சம் புதுப்பிக்கவல்ல ஆற்றல் உற்பத்தி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. வரும் 2025-ஆம் ஆண்டிற்குள் நம் மின்னுற்பத்தி அளவினை மணிக்கு 21,011 மெகாவாட் அதிகரிக்க வேண்டும். இதில் 4251 மெகாவாட் புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறை சார்ந்ததாக இருக்கவேண்டும் என நமது நிறுவனம் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை திட்டமிட்டு செய்து வருகிறோம் என பேசினார்.
விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. சிறப்பாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கும், பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த மாணவ மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.