நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் திமுக கூட்டணி அதிக வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது.
21 மாநகராட்சிகளிலும் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 138 நகராட்சிகளில் திமுக கூட்டணி 131 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பேரூராட்சிகளை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 394 இடங்களில் திமுகவும், 17 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது.
திமுக அதிமுக தவிர மற்ற கட்சிகள் பெரிய அளவில் இதுவரை வெற்றிபெறவில்லை. அமமுக, பாஜக தலா ஒரு பேரூராட்சிளை கைப்பற்றியுள்ளது. நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், பாமக ஆகிய கட்சிகள் சில வார்டுகளில் வெற்றிபெற முடிந்ததே தவிர தலைவர் பதவிகளை கைப்பற்ற இயலவில்லை. குறிப்பாக திமுகவுக்கு இந்த தேர்தலில் இதுவரை கிடைக்காத வகையில் வரலாற்று வெற்றி கிடைத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. 40 ஆண்டுகளாக வெற்றிபெற முடியாத கோபி நகராட்சியில் தொடங்கி, 53 ஆண்டுகளாக வெற்றி கிடைக்காமல் இருந்த பரமக்குடி நகராட்சி வரை அனைத்தையும் தன்வசப்படுத்தி இந்த தேர்தலில் புதிய சாதனை படைத்துள்ளது திமுக.
குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வசிக்கும் நகராட்சியான பெரியகுளம், கம்பம், போடி உள்ளிட்ட நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இதன் உச்சமாக எடப்பாடி பழனிசாமி வீடு இருக்கும் வார்டை சேலம் 23வது வார்டை கைப்பற்றியுள்ள திமுக, எடப்பாடி நகராட்சியையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
நேற்று உள்ளாட்சி தேர்தலில் நாம் கண்டிப்பாக வெற்றிபெறுவோம் என்று ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், இப்படி அபார வெற்றியை திமுக பதிவு செய்திருப்பது அரசியல் நோக்கர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.