சேலம் அருகே, இரும்பு கம்பி பாரத்துடன் பதுக்கி வைத்து கொண்டு வரப்பட்ட 200 கிலோ கஞ்சா மற்றும் லாரியை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். லாரி ஓட்டுநர் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக, சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. டிஎஸ்பி முரளி, ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் காவலர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) வீராணம் அருகே குப்பனூரில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இரும்பு கம்பிகளுக்கு இடையில் 200 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
லாரி ஓட்டுநரிடம் விசாரித்தபோது, அவர் சேலத்தைச் சேர்ந்த முருகன், அவருடைய உதவியாளர் முசிறியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். இரும்பு பாரத்தை கோவைக்குக் கொண்டு செல்ல இருந்ததும், கஞ்சாவை சேலத்தில் விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரியவந்தது.
அவர்களின் பின்னணியில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.