வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி ஜெயலட்சுமி. திருமணம் செய்து கொள்ளாத இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மே 27 ஆம் தேதி மதியம் சமைத்து சாப்பிட்டுவிட்டு, தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். வெயிலின் தாக்கம் காரணமாக புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டின் கதவை தாழ் இடாமல் இருந்துள்ளார்.
மாலை 4 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க ஏசி மெக்கானிக் வேலை செய்யும் தவூத் பாஷா என்ற வாலிபர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்தவர் “எதுக்குப்பா உள்ள வர்ற” எனக் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே... வாலிபர் திடீரென மூதாட்டியை பலவந்தமாகப் பிடித்து கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அலறி கூச்சலிட்டுள்ளார். இதனைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து ஓடி வந்து வாலிபரை பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அடித்தவர்களிடம் இருந்து அந்த வாலிபர் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தப்பியோடிய வாலிபரை தீவிரமாகத் தேடி வந்த காவல்துறையினர், அவரைப் பிடித்து விசாரித்தபோது, மது போதையில் அப்படி செய்துவிட்டதாகக் கூறியுள்ளார். அதனை நம்பாத போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.