சீன அதிபர் ஸி ஜின்பிங் மாமல்லபுரம் வரப் போகிறார். அங்கு பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சு நடத்தவிருக்கிறார். இந்த வருகை தொடர்பாக பல முக்கியமான விமர்சனங்கள் பரவுகின்றன. அத்துடன் சீனாவுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையிலான 2 ஆயிரம் ஆண்டு தொடர்பும் வெளிவந்துள்ளது. பொதுவாக சீன தலைவர்கள் விளம்பரங்களை விரும்புவதில்லை. சீனா செல்லும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் பெரிய அளரில் விளம்பரம் கொடுப்பதில்லை. ஆனால், இந்தியா வரும் சீனா அதிபருக்கு சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை விளம்பர பேனர்கள் வைக்க தமிழக அரசே நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளது.
மோடி பிரதமர் ஆனதிலிருந்து தமிழகத்தில் பெரிய அளவில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டதில்லை. கோ பேக் மோடி #go_back_modi என்ற எதிர்ப்புதான் உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வந்திருக்கிறது. இதை போக்கும் வகையில் தமிழகத்தில் தனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோடி விரும்புகிறார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே, உயிர்ப்பலியையும் மீறி தமிழக அரசே பேனர் வைக்கும் முடிவுக்கு சென்றிருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில்தான் ஸி ஜின்பிங் ஏன் மாமல்லபுரத்தை தேர்வு செய்தார் என்பதற்கான காரணங்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. சமீபகாலமாக தமிழைப் பற்றி பிரதமர் மோடி உயர்வாக பேசுவதற்கான காரணங்களும் புரியத் தொடங்கி இருக்கின்றன.
பல்லவர்கள் காலத்தில் மாமல்லபுரம் துறைமுகம் வர்த்தகத்தில் செழித்திருந்தது. இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கி.பி.2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன களிமண் பானைகள் கண்டெடுக்கப்பட்டதை வரலாற்று ஆய்வாளர் ராஜவேலு குறிப்பிடுகிறார். அதுதவிர, சங்ககாலத்துக்கு பிந்தைய புலவர்களில் ஒருவரான உருத்திரங் கண்ணனார் எழுதிய பட்டினப் பாலையில் மாமல்லபுரம் துறைமுகத்தில் கடலுக்குள் நிற்கும் சீன கப்பல்கள் குறித்த வரிகள் இடம்பெற்றிருக்கின்றன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். கி.மு.185 முதல் 149 க்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவை ஆட்சிசெய்த அரசர் வெய், காஞ்சீபுரத்துடன் வர்த்தகத்தை ஊக்குவித்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் காஞ்சிபுரத்தை ஹுவாங்-சே என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
புத்தமதம் செழித்திருந்த காஞ்சிபுரத்திற்கு சீன வரலாற்று அறிஞர் யுவான் சுவாங் வந்திருக்கிறார். அவர் மாமல்லபுரம் துறைமுகம் வழியாகவே வந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. காஞ்சிபுரத்தில் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். 2004 ஆம் ஆண்டுசலுவன் குப்பம் அகழ்வாராய்ச்சியில் சங்க காலத்திலேயே அதாவது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே துறைமுகமாக செயல்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஆகவே, தமிழகத்தை காட்டி, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நீண்டகால உறவு இருந்ததாக பிரதமர் மோடி நிச்சயமாக தனது உரையில் குறிப்பிடுவார் என்றும், தமிழகத்தின் பெருமைகளை சீனாவுக்கு உணர்த்தியதாக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.