திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நாயனச்செரு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் என்பவரின் 9 வயது மகள் ரேகா. இவர் அங்குள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சண்முகத்தின் உறவினரான திருப்பதி என்பவர் மகள் 6 வயதான ஜனனி. இவரும் அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
கரோனாவால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பிள்ளைகள் நிலத்திற்கு விளையாடப்போவார்கள். அதன்படி நேற்று இரண்டு மாணவிகளும் விளையாடுவதற்காக வாணியம்பாடி அருகே தகரகுப்பம் பகுதியில் உள்ள கரடிகுட்டை ஏரி பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கே கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக குட்டையில் தண்ணீர் தேங்கி இருந்துள்ளது.
குட்டையில் தேங்கி நின்றிருந்த நீரில் மாணவிகள் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் நீரில் முழுகினர், அவர்கள் கத்தியுள்ளனர். இதனைப்பார்த்து அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் குழந்தைகள் நீரில் மூழ்கியது கண்டு கூச்சலிட்டார். இதனை தொடர்ந்து அங்கு வந்த உறவினர்கள் நீண்ட நேரம் போராடி குட்டையில் இருந்த இரண்டு மாணவிகளை சடலமாக மீட்டனர்.
பின்னர் ஏரியை சரிவர தூர்வாரவில்லை, போதிய பாதுகாப்பு இல்லாததால் ஏரியில் மூழ்கி மாணவிகள் உயிரிழுந்ததாக கூறி இதுப்பற்றி விசாரிக்க வேண்டும், குழந்தைகளின் இறப்புக்கு நீதி வேண்டும் என இறந்த மாணவிகளின் உறவினர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வருவாய் துறையினர் மற்றும் திம்மாம்பேட்டை, நாட்றம்பள்ளி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராடத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வாக்குறுதி அளித்தனர். பின்னர் இறந்த மாணவிகளின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிகள் நீரில் முழுகி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.