தமிழ்நாட்டில் நேற்று(16.9.2024) ஆறு இடங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். மொத்தமாக 11. 5 லட்சம் ரூபாய் கணக்கில் வராத தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில்திருக்கோவிலூரில் நடந்த சோதனையில் பல சுவாரசிய தகவல் வெளி வந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி விஜிலென்ஸ் டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு அதிகப்படியான லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலிசாருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது.
இந்த நிலையில் டி.எஸ்.பி சத்யராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட போலிசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தின் நுழைவு வாயில் பூட்டி வைத்து உள்ளிருக்கும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு ஒவ்வொருவராக வெளியே அனுப்பி வைத்தனர். நேற்று முகூர்த்த நாள் என்பதால் அதிகப்படியான பத்திரப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், மதியம் 2 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டதால் பத்திரப்பதிவுக்கு வந்த பொதுமக்கள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பத்திரப்பதிவு செய்ய முடியாமல் காத்திருந்தனர். 5 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கடந்த சனிக்கிழமை(14.9.2024) அன்று காலை 6 மணி அளவில் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்குத் திருஷ்டி கழிக்கப்பட்ட வீடியோ வெளியான நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த சோதனையில் கணக்கிலும் வராத ரூ.2,64,000 கைப்பற்றப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு வராமல் இருக்க வேண்டும் என திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாலை பூஜை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், முதல்நாள் எலுமிச்சை, இரண்டாம் நாள் ஊமத்தை, மூன்றாம் நாள் பூசணி, நான்காம் நாள் கோழி பலி, ஐந்தாம் நாள் கிடா வெட்டு வரை அதிகாலை பூஜை எல்லாம் அமோக நடந்திருக்கிறதாம். இன்னும் இரண்டு நாள் பூஜை மீதம் இருந்த நிலையில் நேற்று திடீரென ரெய்டு நடந்துள்ளது அலுவலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.