ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வேட சின்னானூர் அருகே சின்னக்குட்டை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சங்கீதா(40). இவர்களுக்கு தர்ஷினி (17), கீர்த்தனா (10) என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் தர்ஷினி அதே பகுதியில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பும், கீர்த்தனா நடுபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை சங்கீதா தனது மகள்கள் தர்ஷினி மற்றும் கீர்த்தனாவுடன் செண்பகப் புதூர் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு துணி துவைக்கச் சென்றார். தற்போது கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. சங்கீதா வாய்க்கால் கரையோரம் நின்று துணி துவைத்துக் கொண்டிருந்தார். தர்ஷினி மற்றும் கீர்த்தனா இருவரும் அருகே குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தர்ஷினி நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்து சங்கீதா மகளைக் காப்பாற்றுவதற்காகச் சென்றார். அவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைய மகள் கீர்த்தனா தாய் பின்னால் சென்றார். அவரையும் நீர் அடித்துச் சென்றது. இதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துக் கூச்சலிட்டனர். மூன்று பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இது குறித்த தகவல் பரவி, உடனடியாக நாகராஜ் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். கடத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நீரில் இறங்கி மூவரையும் தேடத் தொடங்கினர். நள்ளிரவு 12.30 மணி அளவில் கோபி கடத்தூர் அடுத்த மில்மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் தர்ஷினி மற்றும் கீர்த்தனா உடல்கள் மீட்கப்பட்டன. சிறுமியின் உடல்களைப் பார்த்து நாகராஜ் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பின்னர் சிறுமிகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தாய் சங்கீதா என்ன ஆனார் என்பது இதுவரை தெரியவில்லை. இன்று 2வது நாளாக அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீரில் மூழ்கி சிறுமிகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.