புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் வைகாசித் திருவிழாக்கள் தொடர்ந்து 2 மாதங்களாக நடந்து வருகிறது. அதே போல கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தில் எழுந்தருளியுள்ள மணிவர்ண மழைமாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டியதுடன் தொடங்கி நடந்து வரும் நிலையில் ஞாயிற்றுக் கிழமை பொங்கல் விழா நடந்தது.
நேற்று மாலை 4 மணிக்கு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காய், கனிகள் தொங்கவிட்டு மணிவர்ண மழைமாரியம்மன் பட்டு அலங்காரத்தில் வீற்றிருக்க வான வேடிக்கைகளுடன் பக்தர்கள் தேரோடும் வீதியில் வடம் பிடித்து தேர் இழுத்துச் சென்றனர்.
முன்னதாக விநாயகர் வீற்றிருக்கும் தேரை பெண்களும், சிறுவர்களும் இழுத்துச் சென்றனர். ஒரே நேரத்தில் இரு தேர்களின் தேரோட்டத்தைக் காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.