
நாம் தமிழர் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர், செய்தி தொடர்பாளர் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வருபவர் சாட்டை துரைமுருகன். இவர் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பல்வேறு நாடுகளில் நிதி திரட்டியதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், சிவகங்கை, தென்காசி, கோவை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வகையில் திருச்சி சண்முகா நகர் 7 வது கிராசில் உள்ள சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ.வின் டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் ஐந்து அதிகாரிகள் இன்று காலை 5.50 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.
சாட்டை துரைமுருகன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது மனைவி மாதரசியிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு அவரது வீட்டில் இருந்து இரண்டு புத்தகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மீண்டும் மறு விசாரணை அழைப்பாணையை நேரடியாக அவரது மனைவியிடம் கொடுத்த அதிகாரிகள் மீண்டும் அலுவலகத்தில் நடைபெறும் விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்திச் சென்றனர்.