சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி, கொளத்தூர், மேட்டூர், ஆத்தூர், கெங்கவல்லி, வாழப்பாடி பகுதிகளில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா கனிகருக்கு புகார்கள் வந்தன. அவருடைய உத்தரவின்பேரில், கஞ்சா கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
கடந்த இரு நாட்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் (அக். 6) மேட்டூர் அணை பகுதியில் கருமலைக்கூடல் காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது மறைவிடத்தில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை சுற்றி வளைத்துப்பிடித்தனர். விசாரணையில் அந்த நபர், மேட்டூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த ராமன் (52) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், அக். 7ம் தேதி, கொளத்தூர் பெரிய தண்டா பேருந்து நிறுத்தம் அருகே முள்புதரில் பதுங்கி கஞ்சா விற்றதாக கருங்கல்லூரைச் சேர்ந்த பெருமாள் (60) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கும்பலை பிடிக்க, காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.