கிருஷ்ணகிரி அருகே, மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த நகை அடகு கடைக்காரரை வழிமறித்து அவரிடம் இருந்த 19 பவுன் தங்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி நகைகளை கொள்ளை அடித்துச்சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி முதன்மைச் சாலையில் அடகுக்கடை நடத்தி வரும் மோகன்லால், ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். பல ஆண்டுகளுக்கு முன்பே வேப்பனஹள்ளியில் குடும்பத்துடன் குடியேறிவிட்டார். இவருடைய வீட்டில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் நகை அடகுக் கடை உள்ளது. மோகன்லாலுக்கு உதவியாக அவருடைய மனைவியும் அவ்வப்போது கடையைப் பார்த்துக் கொள்வார்.
பிப். 2ம் தேதி, இருவரும் வழக்கம்போல் கடைக்குச் சென்றுள்ளனர். அங்கு அடகு வாங்கிய நகைகளை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு, இரவு 8 மணியளவில் கடையை பூட்டி விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுடைய மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்தபடியே வந்த மர்ம நபர்கள், திடீரென்று மோகன்லால் சென்ற வாகனத்தை வழிமறித்தனர். மோகன்லால் சுதாரிப்பதற்குள் அவர் மீது பாய்ந்த மர்ம நபர்கள், அவரிடம் இருந்த நகைகள் கொண்ட பையை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனங்களில் தப்பிச்சென்றனர்.
இதையடுத்து மோகன்லால், வேப்பனஹள்ளி காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். தான் வைத்திருந்த பையில் 19 பவுன் தங்க நகைகளும், ஒரு கிலோ வெள்ளி நகைகள் இருந்ததாகவும், அவற்றை பையுடன் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச்சென்று விட்டதாகவும் புகாரில் கூறியிருந்தார்.
மோகன்லாலின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து வந்த மர்ம நபர்கள்தான் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என காவல்துறையினர் கருதுகின்றனர். இச்சம்பவம் குறித்து வேப்பனஹள்ளி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.