திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்களுக்கான நகர்மன்றக் கூட்டம் திமுக நகர செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான வெள்ளைச்சாமி முன்னிலையில் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் மலைசாமி வரவேற்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்து பேசினார். அவர், “தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு காலமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்த நிலையை மாற்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டு, தமிழகம் முழுவதும் நகர்ப்புற மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை மக்களுக்கு சேவை செய்ய பொறுப்பேற்க செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த நகராட்சியில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் 16 நகர்மன்ற உறுப்பினரும் வெற்றி பெற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து நகர்மன்ற கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். மேலும், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு நீண்டகால பிரச்சனையான குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாத நிலையில் பொது சுகாதார பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு காப்பிலியபட்டி கிராமத்தில் 18 ஏக்கர், 66 செண்டு நிலத்தினை நகராட்சிக்கு தானமாக பெற்று தந்த உணவுத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி 15, 16, 17, 18 வார்டுகளில் பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு உள்ள தரைப் பாலங்கள் மழைகாலங்களில் மழை வெள்ள நீர் தேக்கம் ஏற்பட்டு பொதுமக்களுக்கும், போக்கு வரத்திற்கும் சிரமம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு தரைப்பாலங்களில் வெள்ளநீர் தேங்காமல் வெளியேற்றும் வகையில் மோட்டார் அறை அமைத்து, பைப்லைன் மூலம் வெள்ள நீர் வெளியேற்றும் வகையில் பணிகள் மேற்கொள்ள தீர்மானம் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.