17 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை ஒட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு உருக்கமான அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இதே நாள் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக இந்தியா உட்பட 14 நாடுகளில் சுனாமி ஏற்பட்டது. இதில் தமிழகத்தில் கடலோர பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். தமிழகத்தையே பெரும் சோகத்திற்கு உள்ளாக்கிய இந்த நிகழ்வு நடந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் சுனாமி தினம் அனுசரிக்கப்பட்டது. பட்டினப்பாக்கம் கடற்கரையில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் கடலில் பால் மற்றும் மலர்தூவி நினைவு அஞ்சலி செலுத்தினர்.