தமிழக டி.ஜி.பி.சைலேந்திரபாபுவின் அதிரடி உத்தரவின் பேரில் 'ஆப்ரேசன் கஞ்சா 2.0' என்ற திட்டத்தின் அடிப்படையில் தமிழகம் முழுக்க கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை கைது செய்வதோடு போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். அதேபோல் பல இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டு மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கஞ்சா விற்பனையைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,000 பேரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளதாக ஐ.ஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள தகவலில் 'கடந்த மூன்று மாதங்களில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 8 வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டு இந்த சொத்து முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 31 வீடுகள், 19 மனைகள், 5 கடைகள், 18 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மொத்தமாக 10 மாவட்டங்களில் 831 வழக்குகளில் 1,540 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.