புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நார்த்தாமலை துப்பாக்கி சூடும் மையம் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நார்த்தாமலை பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் டிசம்பர் 30 ஆம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், மற்றும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ளும் மத்திய மண்டல போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கொத்தமங்கலம் பட்டியில் தனது தாத்தா வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, மூளைவரை துளைத்துச் சென்றது.
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுவன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு 4 மணி நேரம் போராடி மூளையிலிருந்த துப்பாக்கிக் குண்டு மற்றும் மண்டை ஓட்டின் துண்டுகளை மருத்துவ குழுவினர் அகற்றினார்கள். அதன் பிறகும் தொடர்ந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஆபத்தான நிலையிலேயே இருந்த சிறுவன் புகழேந்தி கடந்த 3 ஆம் தேதி மாலை உயிரிழந்தார்.
நார்த்தாமலையில் உள்ள துப்பாக்கிச் சூடும் மையத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என சிறுவனின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களும் போராட்டங்கள் நடத்திய நிலையில் தற்போது தமிழக அரசு நார்த்தாமலை துப்பாக்கிச் சூடும் மையத்தை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் டிசம்பர் 30ஆம் தேதியன்றே நார்த்தாமலை துப்பாக்கிச் சூடும் மையம் மூடப்பட்டது. இனிவரும் காலங்களில் அந்த துப்பாக்கிச் சூடும் மையம் பயன்படுத்தப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளது.