கடந்த அதிமுக ஆட்சியின்போது தரமற்ற பேட்டரி வீல் சேர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஆறு வாரத்திற்குள் தமிழக அரசு அறிக்கை அளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்டுவட காயமடைந்தோர் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தசைச் சிதைவு மற்றும் முதுகு தண்டுவட பாதிக்கப்பட்டவர்களுக்கு 2015 முதல் வழங்கப்பட்ட பேட்டரியால் இயக்கப்படும் வீல் சேர்கள் தரமற்றவை என்று தெரிவித்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டுமே அந்த டெண்டர் வழங்கப்பட்டதாகவும் வாங்கப்பட்ட பேட்டரியில் இயக்கப்படும் வீல் சேர்கள் தரமானவையா என்று சோதனை செய்து பார்க்க எந்த அறிவியல் பூர்வமான நடைமுறையும் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற வீல் சேர்கள் பயன்படுத்தியதால் மாற்றுத்திறனாளிகள் மேலும் பாதிக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழுதடைந்த வீல் சேர்களை, சர்வீஸ் செய்வதற்கு எந்த சேவை நிலையங்களும் உருவாக்கப்படவில்லை என மனுதாரர் அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே கடந்த ஆட்சியின் போது வழங்கப்பட்ட பேட்டரி வீல் சேர்களை, திரும்பப் பெற வேண்டும், இதனால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.
இனிமேல் வாங்கக்கூடிய வீல்சேர்களை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி. அல்லது அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு 6 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.