விவசாயிகள் வறுமை நிலையில் இருக்கக் கூடாது. நலிவுற்ற விவசாய குடும்பத்திற்கு மத்திய அரசு வாழ்வழிக்கும் எனக் கூறி ஆண்டொன்றுக்கு ஆறாயிரம் ரூபாய் நேரடி நிதி உதவியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என கிஷான் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில்தான் இப்போது மாபெரும் மோசடியும், கொள்ளையும் தமிழகத்தில் ஏகபோகமாக நடந்திருக்கிறது.
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் இரண்டாயிரம் வீதம் ஆண்டு ஒன்றுக்கு ஆறாயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் தகுதியான விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு வந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் திட்டத்தில் சேர விண்ணப்பித்திருந்தனர். பின்னர் வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகள் இணைந்து விண்ணப்பங்கள் மீது ஆய்வு செய்ததில் 85 ஆயிரம் விவசாயிகள், பயனாளிகள் என நிதியுதவி பெறும் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதவர்களை சேர்த்தி மோசடி நடந்தது போல் ஈரோடு மாவட்டத்திலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சென்ற ஒருவார காலமாக இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்ட விவசாயிகளின் விண்ணப்பங்கள் மற்றும் பயனாளிகள் விவரங்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் முதல் கட்டமாக போலி கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகள் முடக்கம் செய்யப்பட்டன.
இதுபற்றி ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறும்போது, "ஈரோடு மாவட்டத்தில் இந்த திட்டத்தில் சேர்க்கபட்டவர்களின் விண்ணப்ப விபரம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் முதற்கட்டமாக 550 கணக்குகள் போலியாக துவங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, அந்தக் கணக்குகள் உடனே முடக்கம் செய்யப்பட்டதோடு அந்த மோசடி நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பதினோரு லட்சம் ரூபாயைக் கையகப்படுத்தி உள்ளோம். ஈரோடு மாவட்டத்தில் குறைந்த அளவில்தான் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் திட்டம் துவங்கிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் வரும் விண்ணப்பங்களை வருவாய்துறை, வேளாண்துறை அதிகாரிகளால் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தி பயனாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டனர். திட்டத்தின் கடைசி நாட்களில் வெளி இடங்களில் உள்ள கணினி மையங்கள் மூலம் போலி பயனாளிகள் செயற்பட்டுள்ளனர். இப்போது கண்டறியப்பட்டுள்ள 550 நபர்கள் இந்த திட்டத்தில் சேர எவ்வித தகுதியும் இல்லாதவர்கள். ஈரோடு மாவட்டத்தில் நிலம் இருக்கும் அவர்கள் வெளியூரில் வசித்து வருபவர் அல்லது அரசுப் பணியில் இருப்பவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு மாறாக இணைந்த அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மோசடி தொடர்பாக முழு அளவில் விசாரணை நடந்து வருகிறது" எனக் கூறினார்.
ஆனால் ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் ஏழாயிரம் விண்ணப்பங்களில் மோசடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த ஏழாயிரம் விண்ணப்பங்கள் தான் கணினி மையம் மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் அதாவது இணை இயக்குனரின் பாஸ்வேர்டு கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது என அதிகாரிகள் கூறுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
வேளாண்துறை, வருவாய்த்துறை மூலம் இணைக்கப்பட்ட விண்ணப்பங்களிலும் பல மோசடிகள் நடந்துள்ளது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த ந.செ., ஒ.செ., மா.செ. மற்றும் எம்.எல்.ஏ.க்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மொத்தமாக பல விண்ணப்பங்கள் கொடுத்து இந்த திட்டத்தில் இணைக்க வைத்துள்ளனர்.
அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் குடும்பத்தினர் பலரும் பிரதமர் திட்ட நிவாரன நிதியைப் பெற்று வந்துள்ளார்கள். ஆண்டுக்கு ஆறாயிரம் சும்மா வரும் பணத்தை ஏன் விடவேண்டும்? மோடி ஐயா சொன்னாரு 15 லட்சம் தர்றேனு அது நடக்கலே ஏதோ அவரால முடிஞ்சது வருசம் ஆறாயிரம்... அதை தாங்க வாங்குனோம் அது ஒரு தப்புங்களா? என நம்மிடம் கிண்டலாக பேசினார் ஒரு அ.தி.மு.க.நிர்வாகி...!
அ.தி.மு.க. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாடு எல்லாவற்றிலும் முதன்மையான மாநிலமாச்சே... அந்த வரிசையில்தான் இந்த மோசடியும் கொள்ளையும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.