Skip to main content

144 தடையுத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்: சீமான்

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
144 தடையுத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்: சீமான்

இராமநாதபுரத்தில் அமலிலுள்ள 144 தடையுத்தரவை விலக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சமத்துவச் சமுதாயம் அமைக்க அரும்பாடாற்றி உழைத்திட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம் செப்டம்பர் 11ஆம் தேதியன்றும், நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்நாட்களின் பெரும்பகுதியைச் சிறையில் கழித்த பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூசை நிகழ்வு அக்டோபர் 28 முதல் 30ஆம் தேதிவரை பசும்பொன்னிலும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்விரு நிகழ்வுகளையும் கடைப்பிடிக்க முடியாத வகையில் ஆண்டுதோறும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும். 

இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளையும், தேவர் ஜெயந்தியையும் பொதுமக்களே அனுசரிக்க விரும்புகிறபோது அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளித்து நிகழ்வை நெறிப்படுத்துவதுதானே காவல்துறையின் கடமை? அதனைவிடுத்து, பொத்தாம் பொதுவாய் 144 தடையுத்தரவை பிறப்பித்துப் பொதுமக்கள் பங்கேற்பதற்கு இடையூறு செய்வது எந்த வகையில் ஏற்புடையது? சாதியக் கலவரங்கள் ஏற்படும் என்பதையே காரணமாகச் சொல்லி தடைவிதிக்கிற ஆட்சியாளர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு இதனையே செய்து கொண்டிருக்கப் போகிறார்கள்? தடையுத்தரவே இரு சாதியச் சமூகங்களுக்கிடையே சமத்துவத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தி விடுமா? சலசலப்புக்கும், சச்சரவுக்கும் இடங்கொடாவண்ணம் நிகழ்வை சிறப்புற நடத்துவதற்கு ஆக்கப்பூர்வ வழிமுறைகள் ஆயிரம் இருக்க அவையாவற்றையும் செயல்படுத்தாது விட்டுவிட்டு, 144 தடையுத்தரவு பிறப்பித்து நிகழ்வை ஒட்டுமொத்தமாய்க் குலைப்பதை ஒருநாளும் ஏற்க முடியாது. மேலும் தேவர் ஜெயந்திக்கு வரும் மக்கள் எவரும் வாடகை வாகனங்களில் வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருப்பதும், வாடகைக்கு வாகனங்கள் கொடுக்கக்கூடாது என்று உரிமையாளர்களுக்கு உத்தரவு வழங்குவதும் அப்பெருமகனாரை வழிபட வரும் மக்களை அச்சுறுத்தும் அவமானப்படுத்தும் நடவடிக்கையாகும். 

தமிழ் இளந்தலைமுறை பிள்ளைகள் சாதி, மத உணர்வினைக் கடந்து தமிழர் என்ற பெருமித உணர்வோடு இன ஓர்மையைச் சாத்தியப்படுத்தி, சமத்துவத்தைப் பேணிக்கொண்டிருக்கிற இவ்வேளையில் அரசு மேற்கொள்கிற இதுபோன்ற தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் மக்களைப் பிரித்தாளுவதற்குத்தான் உதவுமே ஒழிய, ஒற்றுமைப்படுத்தி ஒருநாளும் சமத்துவத்தை நிலைநிறுத்தாது. 

இராமநாதபுரம் மாவட்டத்தில் இரு மாதங்களாகப் போடப்பட்டிருக்கிற 144 தடை உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும் எனவும், தேவர் ஜெயந்தியை எவ்வித இடையூறு நிகழாவண்ணம் மக்கள் அனுசரிக்கப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்