வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியாக தமிழ்நாடு, கேரளாவிற்கு செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படும் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. ரயில்வே காவல்துறையினர் கண் கொத்திப் பாம்பாக கஞ்சா கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுத்து வந்தாலும், புதுப்புது கும்பல் கஞ்சா கடத்தலில் களமிறங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) அதிகாலையில் ரயில்வே காவல்துறை தலைமைக் காவலர் ராமன் தலைமையில் தனிப்படையினர், திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது டி3 என்ற முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்றுக்கிடந்த இரண்டு பெரிய பெட்டிகளை சோதனை செய்தனர். அந்த பெட்டிகளில் மொத்தம் 8 பார்சல்கள் இருந்தன. அவற்றில் இருந்து மொத்தம் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பெட்டிகளைக் கொண்டு வந்த பயணிகள் யார் என்பது தெரியவில்லை. காவல்துறையினர் சோதனைக்கு வருவதை அறிந்ததும் கஞ்சா கடத்தல் கும்பல் பெட்டிகளை வைத்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட 14 கிலோ கஞ்சாவும், ரயில்வே காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆய்வாளர் சிவசெந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.