கோவை இடையர்பாளையம் லூனா அப்பார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வருபவர் கான்ட்ராக்டர் கனகராஜ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனகராஜ் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் வளர்த்து வந்த செல்லப் பிராணியான நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து, பின்னர் வீட்டின் கதவை உடைத்தனர்.
கனகராஜ் தன் மகள் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த 137 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் 15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை உடைத்து கும்பல் சிசிடிவி காட்சிகள் பதிவாகும் டிவிஆர்-ஐயும் திருடிச் சென்றது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் மண்ணுத்தி போலீசார் கொள்ளையன் ஒருவன் அகப்பட்டான். அந்தக் கொள்ளையனை விசாரித்தபோது இடையர்பாளையம் கான்ட்ராக்டர் கனகராஜ் வீட்டில் 137 சவரன் நகை கொள்ளை உட்பட மூன்று வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலில் நானும் ஒருவன் என ஒப்புக் கொண்டான்.
இதுகுறித்து கேரள போலீசார் அளித்த தகவலின் பேரில் துடியலூர் போலீசார் கேரளா சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொள்ளையனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில் கொள்ளையனின் பெயர் பட்டறை சுரேஷ் என்பதும் மதுரை ஆரப்பாளையம் புட்டுத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது.
மேலும் பட்டறை சுரேஷ் மீது கோவையில் மூன்று வழக்குகளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல கொள்ளைச் சம்பவங்களில் தேடப்படும் பிரபல கொள்ளையன் என்பதும் தெரியவந்தது. சுரேஷிடமிருந்து 20 பவுன் நகை மற்றும் கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் சுரேஷிடம் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளையில் ராஜசேகரன், பாண்டித்துரை, மாரியப்பன் என்கிற கருவாட்டு மாரியப்பன், சுரேஷ் என்கிற சுர்லா சுரேஷ் ஆகியோர் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடையது தெரிய வந்திருக்கிறது.