
'அதிமுகவை நிராகரிப்போம்' என்ற தலைப்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்கள்சபைக் கூட்டம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு போட்டியாக, அ.தி.மு.க. சார்பில் 'வெற்றி நடைபோடும் தமிழகமே' என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரக் கூட்டங்களில் பேசி வருகிறார்.
தனது சொந்தப் பகுதியான (கொங்கு மண்டலத்தில்) சேலம், நாமக்கல்லில் சென்ற வாரம் சுற்றுப்பயணம் செய்த எடப்பாடி, மீண்டும் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக 6, 7-ந் தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் செய்துவருகிறார். 6-ந் தேதி காலை பவானி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடியை பவானி லட்சுமி நகரில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், தங்கமணி, கலெக்டர் கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், தோப்பு வெங்கடாச்சலம், தென்னரசு, சிவசுப்ரமணி, ராஜகிருஷ்ணன், ஈஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.
பிறகு பவானியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கினார்.
"இந்த பவானி பொதுக்கூட்டத்தில் நான் பேசுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். நான் படித்து வளர்ந்தது பவானி தொகுதியில் தான். வேளாண் மக்கள் நிறைந்த தொகுதியான இங்கு அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செ்யப்பட்டுவருகிறது. தண்ணீர் சேமிப்பை அதிகப்படுத்த குடிமராமத்துப் பணிகள் மூலம் ஏரிகள் அனைத்தும் நிறைக்கப்பட்டுள்ளது. தூர்வாராமல் இருந்த நீர் நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளது. மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் மூலம் தண்ணீர் வீணாவதைத் தடுக்க காங்கிரீட் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, கீழ்பவானி கால்வாயில் கசிவு ஏற்படுவதைத் தடுக்க 640 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
'மக்கள் சபை' என்ற பெயரில் கூட்டம் நடத்தும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு என்ன நன்மை செய்தார்? நாடாளுமன்றத் தேர்தலின் போதும் இதேபோல கூட்டம் நடத்தி மனுக்கள் வாங்கினர். அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள். மக்கள் கொடுத்த மனுக்களை எங்களிடம் ஒப்படைக்கவே இல்லை. பொய்ப் பிரச்சாரம் மட்டுமே ஸ்டாலின் மேற்கொள்கிறார். கவர்னரிடம் மனு கொடுத்ததாகக் கூறுகிறார். அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவிக்கிறார். நடக்காத டெண்டரில் ஊழல் செய்ததாகக் கூறுகிறார். வேண்டுமென்று திட்டமிட்டு முதல்வரான என் மீதும், அமைச்சர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுகிறார். மக்களிடம் கவர்ச்சிகரமாகப் பேசி தவறான தகவல்களைப் பரப்புகிறார். முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, துரைமுருகன், பொன்முடி, பெரியகருப்பன், அனிதாராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்குமாறு உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. அதிமுக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ஸ்டாலின் கூறி வருகிறார். டெண்டர் ஆன்லைன் மூலமே தற்போது நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் பெட்டிவைத்து டெண்டர் போடும் முறையே இருந்தது. அதில் யாருக்கு கொடுக்கவேண்டுமோ அவர்களுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. மக்களைக் குழப்பி அதில் அரசியல் செய்கிறார் ஸ்டாலின். அவரது கனவு எப்போதும் பலிக்காது. கானல் நீராகவே இருக்கும். 2-ஜி ஏலத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது. அந்தப் பணத்தில் 200 கோடி ரூபாய் கலைஞர் டிவிக்கு கைமாறியது. ஸடாலின் அதில் பங்குதாரராக இருக்கிறார். இதனை மறைக்க அதிமுக மீது திட்டமிட்டு அரசியல் நாடகத்தை நடத்தி பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைத்ததை எனது அரசு செய்துவருகிறது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக 2,000 அம்மா மினி கிளினிக்கை எனது அரசு அமைத்துள்ளது. தமிழக அரசு எந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும் அதில் ஸ்டாலின் குறைகூறி வருகிறார். இதை மட்டுமே அவர் வாடிக்கையாக வைத்துள்ளார். அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி படிக்க 7.5% உள் இடஒதுக்கீடு செய்துகொடுத்து, 318 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். பவானியில் உள்ள அரசுப் பள்ளியில் நான் படித்தவன். அதன் காரணமாக ஏழை மாணவர்களின் நிலை எனக்குத் தெரியும். 5 லட்சம் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக அறிவித்து 90%பேருக்கு எனது அரசு வழங்கியுள்ளது.
தமிழக அரசு எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் கூறுகிறார். நல்ல ஆட்சி கொடுத்ததால்தான் பல்வேறு விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. கல்வி, உறுப்புமாற்று அறுவைசிகிச்சை, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைகளுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. திமுக கவர்ச்சிகரமான திட்டங்களை மட்டுமே அறிவிக்கும். திமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு நிலம் வழங்குவதாகக் கூறினர். ஆனால் வழங்கவில்லை. குடும்ப அரசியல் மட்டுமே திமுகவில் நடைபெறுகிறது. ஸ்டாலின் தொடங்கி உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

மக்களை ஏமாற்றி திமுக சொத்து சேர்த்துள்ளது. ஆட்சி அமைத்து மக்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள். உங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதுவும் செய்வதில்லை. அதிமுக ஆட்சி மட்டுமே மக்களுக்கான ஆட்சி. மக்களே நீதிபதிகள். மக்களுக்குத் தேவையான அனைத்தும் எங்கள் அரசே செய்துதரும். ஈரோடு மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. அது வரும் தேர்தலிலும் நிச்சயம் நடக்கும். நமது அரசு மீண்டும் அமையும்" இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பவானியைத் தொடர்ந்து அந்தியூர், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் என மாவட்டத்தின் ஒரு பகுதியைப் பிரச்சாரப் பயணமாகச் சுற்றிவந்த முதல்வர் எடப்பாடி, இரவு அவரின் (எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் தோட்டத்தில் உள்ள) பண்ணை வீட்டில் தங்கிவிட்டு 7-ந் தேதி மீண்டும் ஈரோடு மாவட்டத்தில் பயணம் செய்து, அன்று இரவு மீண்டும் தனது பண்ணை வீட்டிலேயே ஓய்வெடுக்கிறாராம். எடப்பாடி எப்போதும் தனது தோட்டத்துப் பண்ணை வீட்டுக்கு வந்தாலே அவரது நட்பு வட்டம், உறவு கூட்டம் இரவில் கதை பேசி உற்சாகமாக இருக்குமாம்...!