சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 1.30 லட்சம் செலவில் பயனாளிகள் அமருமிடம், கழிவறை வசதியை தன்னார்வலர்கள் செய்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் என 4 வட்டங்களை கொண்ட கோட்டமாகும். இந்த வட்ட பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் உள்ளிட்டவர்கள் மனு கொடுப்பதற்காகவும் பல்வேறு காரணங்களுக்காக சார் ஆட்சியர் அலுவலகம் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் காத்திருக்க தனி இடம் மற்றும் கழிவறை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
இதனைதொடர்ந்து சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன் சிதம்பரம் பகுதியில் உள்ள சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தை சார்ந்த நிர்வாகி முஹம்மதுயாசீன் மற்றும் மிஸ்ரிமல் மஹாவீர்சந்த்ஜெயின் அறக்கட்டளை கமல்கிஷோர்ஜெயின், தீபக்குமாரிடம் பயனாளர் அமரும் நிழற்குடை, கழிவறை வசதிகளை செய்து தரும்படி வலியுறுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் பயனற்று சுகாதரமற்ற நிலையில் இருந்த பயனாளர் நிழற்குடை மற்றும் கழிவறையை ரூ.1.30 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் சரிசெய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது. இதனை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. இதனை சார் ஆட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் குறிப்பாக பெண்கள் வரவேற்றுள்ளனர்.