சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் ஈடுபடும் இளைஞர்களை போலீசார் கைது செய்யும் நிலையில், அடுத்த நாள் அவர்கள் கையில் மாவுக்கட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகும். 'மாவுக்கட்டு ட்ரீட்மென்ட்' என வைரலாகும் இந்த சம்பவங்கள் அண்மைக்காலமாக குறைந்து வந்திருந்த நிலையில் தற்போது பேருந்து கண்ணாடியை உடைத்த இளைஞர் ஒருவருக்கு 'மாவுக்கட்டு ட்ரீட்மென்ட்' கொடுக்கப்பட்டுள்ளது வைரலாகி வருகிறது.
அண்மையில் சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 87 எண் கொண்ட பேருந்து கண்ணன்தாங்கல் கிராமப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பேருந்தில் சுப்பிரமணியன் (ஓட்டுநர்) சாரங்கன் (நடத்துநர்) இருந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட பெண் பயணிகள் அந்தப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது 3 இளைஞர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் ஒலி எழுப்பிக் கொண்டு வந்துள்ளார்கள். இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியனுக்கும் இளைஞர்களுக்கும் இடையே தகராறு எடுக்கப்பட்டது.
மூன்று இளைஞர்களும் கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகின்ற நிலையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து அரசு பேருந்து முகப்பு கண்ணாடியை உடைத்தனர். இதனால் பேருந்தில் இருந்த பெண் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினர். பரபரப்பாக இருந்த சாலையில் திடீரென அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருந்த நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்தைச் செய்தது சரவணன் தலைமையிலான ரவுடி கும்பல் என்பது தெரியவந்தது.
சரவணனுடைய மொபைல் எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில் ரயில்வே தண்டவாளம் பகுதியில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. அவனைச் சுற்றிவளைத்த போலீசார் சரவணனைப் பிடிக்க முயன்றபோது தப்பித்து ஓட முயன்ற சரவணன் தண்டவாளத்தில் சறுக்கி கீழே விழுந்து வலது கையில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து போலீசார் சரவணனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மாவுக்கட்டு போட்டு உள்ளனர். இந்தச் சம்பவத்தில் சரவணன் மட்டுமல்லாது சிவா என்கிற இயான் மற்றும் தியாகராஜன் என்கிற இரண்டு பேரையும் கைது செய்துள்ள போலீசார் இளைஞர்களிடம் இருந்து 13 பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்துள்ளனர்.