தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு இயற்கை முறையிலான உணவுகளை உட்கொண்டும் உடற்பயிற்சிகள் மேற்கொண்டும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகேயுள்ள வெண்கரும்பூர் கிராம இளைஞர் மன்றம் சார்பில் நடைபெற்ற மினி மரத்தான் ஓட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் தொடங்கியது. இந்த மினி மரத்தான் ஓட்டத்தில் சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என 300 நபர்கள் கலந்து கொண்டனர். காலை 8.10 மணிக்கு தொடங்கிய மினி மாரத்தான் ஓட்டத்தில் 13 கிலோமீட்டர் இலக்கை அடைந்து சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் முதல் இடத்தைப் பிடித்தார். சேலம் மாவட்டம் சின்னப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹரிகரன் இரண்டாவது இடத்தையும், கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த ராஜகிருஷ்ணன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
பெண்களில் சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தன்ஷிகா 13 கிலோமீட்டரை விரைவாகக் கடந்து முதல் ஆளாக இலக்கை அடைந்தார். சிறுவர்களில் பெரியவடவாடி கிராமத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் பிரபஞ்சன் முழு இலக்கையும் கடந்து வெற்றிபெற்றார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மினி மரத்தான் ஓட்டக் குழுவின் சார்பில் பரிசுப் பொருட்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.