இந்தியாவில் 2வது கரோனாவின் தாக்குதல் மிக வேகமாகப் பரவிவருகிறது. இதில், கேரளாவில் மட்டும் ஒரே நாளில் 10,031 பேர் பாதிக்கப்பட்டுளனர். இதேபோல், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8,449 பேரை தாக்கியுள்ளது. இந்த எண்ணிக்கை மாவட்டம் தோறும் அதிகரித்துவிடாமல் தடுக்க ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதில், தமிழக - கேரளா எல்லையில் இருக்கும் குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் கேரளாவுக்குச் சென்று வருகின்றனர். இரு மாநிலத்துக்கும் இடையே நேரிடையாக பஸ் போக்குவரத்து மட்டுமே இல்லையே தவிர, தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். இதனால், குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவியுள்ளது.
இந்த நிலையில், எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆய்வு செய்தார். அப்போது அந்தப் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதோடு எல்லையில் உள்ள சாலைகளையும் மூட உத்தரவிட்டார். இதைத் தொடா்ந்து இன்று (17-ம் தேதி) முதல் கடுவாக்குழி ரோடு, மார்க்கெட் ரோடு, பனங்காலை, மலையடி, வன்னியகோடு, ராமவர்மன்துறை, உன்தன்கோடு, புலயூர்சாலை, யமுனா தியேட்டர் ரோடு, கச்சேரி நடை, பாத்திமாபுரம், புன்னமூட்டுகடை ஆகிய 12 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இது தவிர நெடுஞ்சாலையான களியக்காவிளை ரோடு மார்க்கமாக தான் வாகனங்கள் கடும் சோதனைக்குப் பிறகு செல்ல முடியும். இதையடுத்து கேரளா குமரி வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தபடும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.