இன்று ராமநாதபுரம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மேலும் 12 மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இன்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 6 விசைப்படகுகள் மற்றும் அதில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 42 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து உள்ளதாகத் தகவல் வெளியாகியது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து மீனவர் சங்கங்கள் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், 42 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப் போவதாகவும், நாளை ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மீனவர் சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 42 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மேலும் 12 மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.