போலீசார் தாக்குதலால் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தையும், மகனும் இறந்த விவகாரம் தமிழகமெங்கும் ஒலித்த நிலையில், "என்னுடைய கணவரின் தற்கொலைக்குக் காரணம், போலீஸ் எஸ்.ஐ.-க்கள் அடித்த அடியே!" என காவல்துறைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை புதிய மனுத் தாக்கலாகியுள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல்நிலைய எல்கைக்குட்பட்டது குறும்பலாப்பேரி. இங்குள்ள ஆவுடைக்கண் நாடார் தெருவினைச் சேர்ந்த ஜமுனாபாய் என்பவர், தன்னுடைய வழக்கறிஞர் பினேகாஸ் மூலமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
"கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஊரைச் சேர்ந்த அருள்குமார் என்ற அருணாசலத்திற்கும் எனக்கும் திருமணம் நடந்தது. சந்தோஷ் மற்றும் பிரின்ஸ் என இரு குழந்தைகள் இருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் மீன் விற்பனை செய்து குடும்பத்தினை நடத்தி வந்தார் எனது கணவர். கரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் போதுமான மீன்வரத்து இல்லாததால் மீன் வியாபாரம் மந்தமானது. அதனால் கீழப்பாவூர் உள்ளிட்ட ஊர்களின் குளத்தில் மீன்பிடித்து அப்பகுதியிலேயே மீன் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 21/05/2020 அன்று மீன் வியாபாரத்திற்காக வெளியே சென்றவர், இரவுப் பொழுதில் தன்னுடைய டூவீலர் இல்லாமல் வீடு திரும்பினார். கீழப்பாவூர் குளத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது தன்னுடைய இருசக்கர வாகனத்தை போலீசார் எடுத்துச் சென்றதாகவும், நாளை காலை வந்து காவல் நிலையம் வந்து பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியதால் வீடு திரும்பி விட்டேன்" எனக்கூறினார்.
மறுநாள் காலை தன்னுடைய இருசக்கர வாகனத்தை வாங்க காவல்நிலையம் சென்றவர் இரவு 09.00 மணி வரை ஆகியும் வீடு திரும்பாததால், நானே குழந்தைகளை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்றேன். அங்கே என்னுடைய கணவரை ஜட்டியுடன் நிற்க வைத்து அடித்துக் கொண்டிருந்தனர் எஸ்.ஐ.-க்களான சுரேஷ்குமாரும், பலவேசமும். நான் கத்திக் கூப்பாடு போட்ட நிலையில் சிறிது நேரம் கழித்துக் காயங்களுடன் வீட்டிற்கு அனுப்பினார்கள். இருப்பினும், இருசக்கர வாகனத்தைக் கொடுக்கவேயில்லை. இதனால் மனமுடைந்து இரவெல்லாம் புலம்பிய எனது கணவர் மறுநாள் காலையில் வெளியே சென்று விஷமருந்தி தற்கொலை செய்த நிலையில் மீட்கப்பட்டார். என்னுடைய கணவரின் தற்கொலைக்குக் காரணம் அந்த இரு எஸ்.ஐ-க்களுமே! மாவட்ட ஆட்சியர் தொடங்கி மாநில முதல்வர் வரை புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லாததால் இப்பொழுது இங்கு முறையிட்டுள்ளேன். எனது கணவரின் தற்கொலைக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும்." என்கின்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது அந்த மனு.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு வர, வழக்கை விசாரித்தவர், "வழக்குத் தொடர்பாக ஆலங்குளம் டி.எஸ்.பி. விசாரணை செய்து நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு, வழக்கினை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.