மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்திற்கென 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி, அதற்கான சட்டத்தை நிறைவேற்றினார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சட்டத்திற்கு கவர்னர் பன்வாரிலாலின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில், மஹாராஷ்ட்ரா மாநில அரசு வழங்கிய இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட ஒரு வழக்கில், இடஒதுக்கீடு வழங்கியதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருப்பதால், தமிழக அரசு வழங்கிய 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக திடீர் பரபரப்பு உருவாகியிருக்கிறது.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த 2018இல் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்தது. பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக இருந்தார். மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட வருடங்களாக இருந்த வந்தது.
இதனை ஏற்று, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மராத்தா சமூக மக்களுக்காக 16 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கி, மாநில சட்டசபையில் சட்டம் நிறைவேற்றினார் தேவேந்திர பட்னவிஸ். இதற்கு மாநில கவர்னரும் ஒப்புதல் அளித்தார். சட்டமும் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்ததுடன் கல்வியில் 13 சதவீதமும், வேலைவாய்ப்பில் 12 சதவீதமும் மட்டுமே மராத்தா மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கலானது. இந்த வழக்கு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த அசோக்பூஷன், எல்.என். ராவ், அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா, ரவீந்திரபட் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, நேற்று (5.5.2021) தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், “அரசியல் சட்டத்தின் 14வது பிரிவுக்கு எதிராக தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. நாட்டில் அசாதாரணமான சூழல் நிலவும் நிலையில்தான் 50 சதவீதத்துக்கு அதிகமான இடஒதுக்கீட்டை பரிசீலிக்கலாம். ஆனால், மராத்தா மக்களுக்குத் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டிய அசாதாரணமான சூழல் நிலவவில்லை. கல்வி மற்றும் பொருளாதார நிலையிலும் மராத்தா மக்கள் பின்தங்கியிருக்கவில்லை. அதனால் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டு சட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம், இந்தச் சட்டத்தால் பலனடைந்தோருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த தீர்ப்பு மஹாராஷ்ட்ராவில் அதிர்வுகளை ஏற்படுத்த, தமிழகத்திலும் இதுகுறித்த விவாதங்கள் எழத் துவங்கிவிட்டன. குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் வழங்கப்பட்ட வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கும் ஆபத்து சூழ்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை கடந்த ஏப்ரலில் விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் இந்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. அதேசமயம், இது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்து, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளது. இந்த சூழலில்தான், மராத்தா மக்களுக்கான இடஒதுக்கீட்டு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள தீர்ப்பு பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் தரப்பில் விசாரித்தபோது, “மராத்தா மக்களுக்கு அந்த மாநில அரசு வழங்கியது தனி இடஒதுக்கீடு! ஆனால், வன்னியர் மக்களுக்கு தமிழக அரசு வழங்கியிருப்பது உள் இடஒதுக்கீடு! மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று வகைப்படுத்திதான் வன்னியர் சமூகத்துக்கு உள் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியது தமிழக அரசு. அதனால், மராத்தா மக்களுக்கான தனி இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பு, 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டத்துக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது” என்கின்றனர்.