தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க வேதாந்தா நிறுவனம் தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.
இந்தியாவில் கச்சா எண்ணெய் தொழிலில் முன்னணியில் உள்ள 'கெய்ர்ன் ஆயில்' என்ற வேதாந்தா குழுமத்தின் அங்கமாக இருக்கக்கூடிய நிறுவனம் தமிழகத்தில் விழுப்புரம், நாகப்பட்டினம், புதுச்சேரியில் காரைக்கால் ஒட்டிய கடலோர பகுதிகளில் எண்ணெய், எரிவாயு திட்டங்களுக்கு அனுமதிகேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், தமிழகத்தில் விழுப்புரம், நாகப்பட்டினம் கடலோர பகுதிகளில் 102 எண்ணெய் கிணறுகளையும், புதுச்சேரியில் காரைக்காலை ஒட்டிய கடலோர பகுதிகளில் 137 கிணறுகளையும் உருவாக்கி ஆய்வுசெய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் கடலோர பகுதிகளில் எண்ணெய், எரிவாயு திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதையும் வேதாந்தா குழுமத்தின் கெய்ர்ன் ஆயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே இதேபோல் விழுப்புரம், நாகை நிலப்பகுதிகளில் எண்ணெய் எடுக்க அனுமதி கோரி பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி தமிழக அரசுக்கு எழுதியிருந்த கடிதம் நிராகரிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் தூத்துக்குடியில் 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டுக்கு பிறகு வேந்தாந்தாவின் ஸ்டெர்லைட் மூடப்பட்ட நிலையில் வேறொரு திட்டத்திற்கு மீண்டும் வேதாந்தா அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
.