விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுக்கா பழைய கருவாச்சி கிராமத்தில் நேற்று (அக். 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் ஊராட்சியில் நடைபெற்ற திட்டப்பணிகள் மற்றும் செலவினங்கள் குறித்த வரவு செலவு கணக்குகளை கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவர் முன்னிலையிலும் வாசித்தனர்.
இதில் கலந்து கொண்ட பொதுமக்கள், பல்வேறு கோரிக்கைகளை அளித்தனர். அப்போது ஒன்றிய கவுன்சிலர் சௌபாக்கியம் என்பவரின் கணவர் கதிரேசன், “ஆறுமுகம் என்பவரின் மனைவி கடத்தல் மது பாட்டில் விற்பனை செய்ததற்காக கடந்த மே மாதம் 30 ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கடந்த 23ஆம் தேதி தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் சிறையில் இருந்த நாட்களிலும் அவர் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்ததாக அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கிராமத்தில் இறந்து போன சிலரின் பெயரிலும் வேலை செய்ததாக பணம் அளிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்தவருக்கும், இறந்து போனவர்களுக்கும் பதிலாக ஆள் மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது” என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இதனால் கிராம சபை கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அந்த ஊராட்சியில் நிரந்தர ஊராட்சிச் செயலாளர் இல்லாததால் பல குழப்பங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் அவசர அவசரமாக கூட்டத்தை முடித்து விட்டு புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. பிறகு கூட்டமும் கலைந்து செல்ல, ஆறுமுகமும் அவரது மனைவியும் கதிரேசனை வழிமறித்து அவரை தாக்கியதாக கூறி கதிரேசன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கண்டாச்சிபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.