திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 80 பேர் மற்றும் வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் 30 பேர் என மொத்தம் 110 பேர் தற்போது உள்ளனர். பொய் வழக்கில் கைது செய்துள்ள தங்களை, வழக்குகளில் விடுதலை பெற்றும், தண்டனைக் காலத்திற்கு மேலும் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர் எனவும், ஜாமீனில் வந்தவர்களையும் கைது செய்துள்ளதாகவும், கொடுமையான கரோனா காலத்திலாவது தங்களை விடுதலை செய்ய வேண்டும். குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து தொடர்ந்து பல்வேறு கட்ட உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை கடந்த மாதம் சந்தித்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் மறுவாழ்வு திட்ட ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் கொண்ட குழு விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கொண்ட படகு பழுதடைந்து தமிழக எல்லைப் பகுதிக்குள் வந்தது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் கடந்த 7 மாதங்களாக மத்திய சிறை வளாகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் விசாரணை நடைபெற்று தற்போது அந்த பத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து இலங்கை செல்லும் விமானத்தில், இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க உள்ளனர். இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள மீதமுள்ள 70 இலங்கை தமிழர்களும் தமிழக அரசின் மறுவாழ்வு திட்ட ஆணையர்கள் கொண்ட குழு அளித்த உறுதிமொழியை நம்பி விடுதலை கிடைக்கும் என நம்பிக்கையோடு நாட்களை கழித்து வருகின்றனர்.