சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மெத்த பெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் புழக்கத்தில் இருப்பதாகவும், இதற்கு வசதி படைத்த கல்லூரி மாணவர்கள், தொழில் அதிபர்கள், மட்டுமின்றி திரை நட்சத்திரங்கள் சிலரும் அடிமையாகி உள்ளதாகவும், சென்னையில் உள்ள ஒரு சில நட்சத்திர விடுதிகளில் மறைமுகமாக வாடிக்கையாளர்களுக்கு இந்த போதைப் பொருள் விநியோகிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாயின.
இதனைக் கட்டுப்படுத்த தமிழக காவல்துறை சார்பில் ஏ.என்.ஐ.யு புதிய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, அதன் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில், கடந்த 21 ஆம் தேதி சென்னை மாதவரத்தில் மெத்தம் பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்த வெங்கடேசன், கார்த்திக், ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1.5 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெங்கடேசன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பஞ்சாப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து கடந்த 2021 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியில் வந்தது தெரியவந்து. பின்னர் பெரம்பூரைச் சேர்ந்த தனது உறவினரான பிரபு மற்றும் சண்முகம் ஆகியோருடன் சேர்ந்து மியான்மரில் இருந்து முகவர்கள் மூலமாக அரியானா, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் வழியாக சட்டவிரோதமாக மெத்தம் பெட்டம்மைன் போதைப் பொருள் கடத்தி வந்து தமிழக முழுவதும் புழக்கத்தில் விட்டதும், மியான்மரில் ஒரு கிராம் 150 ரூபாய் கொடுத்து வாங்கி வந்து தமிழகத்தில் அதனைக் கிராம் ஒன்று 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் இதற்கென 50 குழுக்கள் தனித்தனியே செயல்பட்டு வந்ததும் அம்பலமானது.
இந்த நிலையில் நேற்று சென்னையைச் சேர்ந்த சாகுல் அமித் மற்றும் லாரன்ஸ் என்பவரும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது மனைவி ஜாவ மெரிட்டா, சரத்குமார், மதுரையைச் சேர்ந்த லட்சுமி நரசிம்மன், முருகன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 17 கோடி ரூபாய் மதிப்பிலான 17.816 கிலோ மெத்தம் பெட்டமைன் மற்றும் இரண்டு மகிழுந்துகள், இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்து அவர்களின் சொத்துக்களை முடக்கினர். பின்னர் அவர்களை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் நடுவன் சிறையில் அடைத்தனர்.