தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (08.04.2021) புதிய கரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, ஷாப்பிங் மால் உட்பட பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும். இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வர இ-பதிவு வாங்கும் முறை தொடரும். திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்.10ஆம் தேதியிலிருந்து தடைவிதிக்கப்படுகிறது. ஏப்.10ஆம் தேதியிலிருந்து சென்னை கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் இன்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி. பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க மட்டுமே அனுமதி; நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை. தியேட்டர்களில் மீண்டும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
அனைத்து தமிழக வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதி. தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். ஆட்டோவில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் மாஸ்க் முழுமையாக அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம், பொது இடத்தில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம், கரோனா குவாரண்டைன் விதியை மீறினால் 500 ரூபாய் அபராதம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் கரோனா விதிமுறைகளை மீறுவோரிடம் நாள்தோறும் 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க இலக்கு வைத்துள்ளது சென்னை மாநகராட்சி. அதிகபட்ச இலக்காக ராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில், ஒருநாளில் 1.50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சலூன், ஜிம், ஸ்பாக்கள் ஆகியவை விதி மீறினால் 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.